இன்று நகரங்களில் பிழைக்க வந்திருக்கும் முக்கால்வாசிப் பேர் விவசாயிகளின் பிள்ளைகள்தான். வயதானவர்களும், நோயாளிகள் மட்டுமே வாழும் சூழலுக்கு கிராமங்கள் வந்து விட்டன. விவசாயம் ஏதோ வேண்டாத தொழில் என்பது போல் ஆகி விட்டது. அடுத்த தலைமுறை கிட்டத்தட்ட வேறு வேலைகளுக்குப் போய் விட்டது. தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்வதை விவசாயம் செய்யும் தகப்பன்களே விரும்பவில்லை. "இந்த கஷ்டம் என்னோட போகட்டும்ப்பா, நீயாவது...' என்பதுதான் அவர்களின் நினைப்பு. காய வேண்டிய நேரத்தில் மழை பெய்து கெடுக்கிறது. பெய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்யாமல் காய்ந்து கெடுக்கிறது என்பது விவசாயியின் அதிகபட்ச குமுறல். விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்ல சாகடித்து விட்டால் என்ன ஆகும் இந்த தேசம்? இதற்கு யார் பொறுப்பு? விவசாய நிலங்கள் எல்லாம் குடியேறும் நிலங்களாக மாறி விட்டால் எதிர்கால சமூகம் சோற்றுக்கு என்ன செய்யும்? இப்படியொரு பின்னணி இந்த கதைக்கு ரொம்பவே அவசியமானதாக இருந்தது. கமர்ஷியல் என்பதைத் தாண்டி வல்லமையான சங்கதிகள் இதில் இருக்கின்றன'' என்று பொறுப்புடன் பேசுகிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். "வெண்ணிலா வீடு' படத்தின் இயக்குநர். இயக்குநர் பாரதிராஜாவின் சீடர்.
எப்படிப்பட்ட படம் என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது.... ஆனால் இப்போதுள்ள டிரெண்டுக்கு இது சரியாக வருமா.....?
இந்த 5 மாதத்தில் 100-க்கும் அதிகமான படங்கள் வெளிவந்து விட்டதாக ஒரு புறம் கவலை இருக்க, நினைவில் நிற்க கூடிய அளவில் ஒரு படம் கூட இல்லை என்பது இதில் பெரும் கவலை. இந்தக் கதையை நான் முன் எடுக்க ஒரு வகையில் இந்த பெரும் கவலையும் காரணம். வாய்ப்புக்காக நான் தயாரிப்பாளர் அருணிடம் சொன்னது வேறு கதை. ஆனால் அவரின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்தது. வெகு நாள்களாக உள்ளுக்குள் இருந்த இந்தக் கதையை சொல்லி பார்க்கலாம் என சொன்னேன். ஒரு நிமிட அமைதிக்குப் பின் இந்தக் கதையை நானே தயாரிக்கிறேன் என அட்வான்ஸ் கொடுத்தார். எக்கச்சக்க உழைப்பு, ஏராளமான தவணைகள், வாழ்நாள் முழுக்க கடனாளி, மனம் முழுவதும் அழுத்தம் என்று அனுதினமும் பரிதாபத்தில் உழல்வது நடுத்தர வர்க்கம்தான். அதிகம் சிரமப்படாமல் எல்லாம் வேண்டும். தடியும் உடையக் கூடாது. பாம்பும் சாக வேண்டும் என்று நினைப்பதுதான் இதற்கு காரணம். உணவு, உழைப்பு, சிந்தனை, காதல் என எல்லாவற்றிலும் இருக்கும் இந்த மேலோட்டத்தன்மை நெருக்கடிகளையும், சிக்கல்களையும் ஒரு சேர கொண்டு வந்து விடுகிறது. கிராம வாழ்க்கையில் ரசனைகள் கூடி கிடக்கும். நகர வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் பற்றி கவலை இருக்காது. ஆனால் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்த ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் மனதுக்குள்ளும் ஒரு மில்லியனர் கனவு ஒளிந்திருக்கிறது. இந்த உண்மை ஒவ்வொரு காட்சியிலும் நிச்சயம் வெளிப்படும்.
நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை விமர்சிப்பதுதான் இந்த கதையின் நோக்கமா....?
அப்படி இல்லை. பணக்காரர்கள் அனைவரும் நல்லவர்கள் என்பதும் இதன் பொருள் அல்ல. நாம் வாழும் இந்த சமூகம், சுற்றுச் சூழல், அரசியல் என எல்லாவற்றையும் தங்களது லாப வெறிக்காக கெடுத்தது பெரும் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும்தான். இதை பணம் படைத்தவர்களே மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த அபாயத்தை அனைத்து மக்களும் உணர விடாமல் செய்வது நடுத்தர வர்க்கம்தான். பூக்கார அம்மாவிடம் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசுபவர்கள், ஷாப்பிங் மால்களில் கேட்பதை கொடுத்து விட்டு கூடுதலாக டிப்ஸþம் தருவார்கள். காரணம் கௌரவம். இந்த போலி கௌரவம்தான் பேராசையாக பல நேரங்களில் உருவெடுக்கிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்காரனும் ஓட்டுக்குப் பணம் தரவில்லை என்பதற்காகவே ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை ஏராளமாம். ஆசைகாட்டி ஏமாற்றுபவர்களின் முதலீடே இந்த நடுத்தர வர்க்கத்தின் பேராசைதான். எத்தனை முறை புதைக்குழிக்குள் விழுந்தாலும், எழுப்பி விட்டு அவர்களையே மறுபடியும் முதலீடாக்கி பணம் பார்க்க ஒரு கூட்டம் வரிசையில் நின்று கொண்டே இருக்கிறது. ஒரு குடும்பம் வாங்கி கொண்டு போகிற இரவல் நகையால் அடுத்தடுத்து பிரச்னைகள். அதன் பின் நடக்கும் சம்பவங்களுக்குப் பின் அனைத்துமே தடதடக்கும்
சுவாரஸ்யம்.
"மிர்ச்சி' செந்தில், விஜயலெட்சுமி ஜோடி பொருத்தம் நல்லா இருக்கே...?
எல்லோருக்கும் அறிமுகமான ஒருவர்தான் இதில் ஹீரோ என்பது என் தீர்க்கமான முடிவு. நட்சத்திரங்களிடம் ஒப்படைக்கும் அளவுக்கு இந்தக் கதையில் தேவை இல்லை. தொலைக்காட்சி தொடர்கள் மூலம் எல்லோருக்கும் பரிச்சயமானவர் "மிர்ச்சி' செந்தில். பெண்களின் சுயநலம், பேராசை, எதிர்பார்ப்புகள் இவைகள்தான் கதை என்பதால், "மிர்ச்சி' செந்தில் என் முதலாவது தேர்வாக இருந்தார்.
விஜயலெட்சுமி உண்மையில் நடிக்கத் தெரிந்த பெண். "இதுவரை எந்த இமேஜூம் எனக்கு இல்லை. உண்மையில் நான் நடித்தால் இதில் நன்றாக இருக்கும்' என்று படத்தின் அதிகமான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இருவருமே திருத்தமான நடிகர்கள். என்ன தேவையோ அதை செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்புக்கும், நம்பிக்கைக்கும் இந்த சினிமா நிச்சயம் பாராட்டுக்களைத் தேடிக் கொடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.